வெள்ளி, 6 ஏப்ரல், 2012

எங்கள் வீடு

பக்கத்துக்கு வீடுகளை விட உயரமாய்
மேல் தளத்தில்
ஆஸ்பெஸ்டாஸ் ஓடு வேய்ந்த கம்பீரத்துடன்
மழை காலங்களில்
பின்புறம் சேறும் சகதியும் கொண்ட
செந்நீர் ஓடும் வாய்க்காலுமாய்
கரையைத் தொட்டுக்கொண்டு
வேப்பமரமும், கொடுக்காயப்புளி
முருங்கயுமாய்
முக்கிய சாலைக்கு அருகிலேயே
முன்புறம் விசாலமான
காலியிடமும்
நாலு நண்பர்களுடன்
சாவகாசமாய் அமர்ந்து
இலக்கியம் பேச திண்ணையுமாய்
சௌகரியமாய்தான் இருக்கிறது
குடித்தால் மட்டுமே வந்து
ரகளை செய்யும்
வீட்டுக்காரனின்
சொந்த வீடு.

எங்கள் வீடு

பக்கத்துக்கு வீடுகளை விட உயரமாய்
மேல் தளத்தில்
ஆஸ்பெஸ்டாஸ் ஓடு வேய்ந்த கம்பீரத்துடன்
மழை காலங்களில்
பின்புறம் சேறும் சகதியும் கொண்ட
செந்நீர் ஓடும் வாய்க்காலுமாய்
கரையைத் தொட்டுக்கொண்டு
வேப்பமரமும், கொடுக்காயப்புளி
முருங்கயுமாய்
முக்கிய சாலைக்கு அருகிலேயே
முன்புறம் விசாலமான
காலியிடமும்
நாலு நண்பர்களுடன்
சாவகாசமாய் அமர்ந்து
இலக்கியம் பேச திண்ணையுமாய்
சௌகரியமாய்தான் இருக்கிறது
குடித்தால் மட்டுமே வந்து
ரகளை செய்யும்
வீட்டுக்காரனின்
சொந்த வீடு.

கவிதை

கண்களை மூடி

தொழுகையில்

நிற்கும் போதெல்லாம்

பூதாகாரமாய்

எதிரே நிற்கிறது

சைத்தான் !

********

2.

ஆறறிவுள்ள மனிதன் நான்

என்னால் எதையும்

செய்ய முடியும்

இறுமாந்திருந்த நேரத்தில்

சட்டென

நதி கடந்து

மலை மீது பறக்கிறது

ஒரு வண்ணத்துப் பூச்சி....

வியாழன், 29 மார்ச், 2012

கோவை இலக்கிய சந்திப்பின் 16 வது நிகழ்வு

கோவை இலக்கிய சந்திப்பின் 16 வது நிகழ்வு 25.3.12 ஞாயிறு அன்று 4 நாவல்கள் 7 கவிதைத் தொகுப்புகள் என 11 நூல்கள் விமர்சனம் காலை முதல் மாலை வரை இனிது நடைபெற்றது.அவைநாயகன் அவர்கள் நடுவராக இருந்து நிகழ்வுகளை நடத்தினார்.சிறப்பு விருந்தினர்களாக ஞானிஅய்யா, குளச்சல் மு.யூசுப்,கனடிய ஈழ எழுத்தாளர் அகில், புது எழுத்து மனோன்மணி ஆகியோர் கலந்து கொண்டனர். குளச்சல் யூசுப் அவர்கள் மலையாளத்திலிருந்து மொழி பெயர்த்த நான்கு மிக முக்கிய நாவல்களான மீசான் கற்கள்,மக்க்ஷர்பெருவெளி , அக்னிசாட்சி ,ஒரு அமர கதை ஆகிய நாவல்கள் குறித்து திரு.யுகமாயினி சித்தன் அவர்கள் மிகச் சிறப்பாக விமர்சித்து மதிப்புரை வழங்கினார். புனத்தில் குன்சப்துல்லா வின் இரண்டு நாவல்களின் கதைகளை சொல்லி கதை நிகழ்வுகளை கண்முன்னே கொண்டுவந்தார் சித்தன். ஸ்ரீ குமார் எழுதிய "ஒரு அமர கதை" புத்தகத்தையே இன்று தான் பார்க்கும் வாய்ப்பே கிடைத்தது.தந்த்ரா யோகம் பற்றி இந்திய அளவில் எழுதப்பட்ட முதல் நாவல் இது என்பது குறிப்பிடத்தக்கது.1997 ல் மொழி பெயர்க்கப்பட்ட நாவல் இது .மறுபதிப்பு வரவேயில்லை. முதல் பதிப்பே யாருக்கும் தெரித்த நிலையில் மறுபதிப்பு எங்கே வரும் ..? இந்த நாவல் குறித்து சித்தன் அவர்களின் மதிப்புரை உன்னதமான ஆய்வுக்கட்டுரையாக இருந்தது . "ஒரு அமர கதை'' என்ற இந்த நாவலை " காதை " பதிப்பகம் வெளியிட்டுள்ளது.மறுபதிப்பு யாரவது கொண்டுவரவேண்டும்.இந்த நான்கு நாவல்களை குறித்து பேசும் போது ,மலையாளத்தில் எழுதுவது போல பாலியலை இங்கே எந்தப்படைப்பா ளியும்,இவ்வளவு வெளிப்படையாக,மூடி மறைக்காமல் துணிச்சலுடன் எழுதவில்லை - எழுதுவதில்லை என்று சித்தன் அவர்கள் குறிப்பிட, திரு.பொதியவெற்பன் அவர்கள் தி.ஜா, தஞ்சை பிரகாஷ், எம்.வி.வெங்கட்ராம் போன்றோர் எழுதியுள்ளனர் என்றார்.தஞ்சையை தவிர வேறு பகுதி படைப்பாளிகள் எழுதவில்லை என்றார் சித்தன்."பொதுவுடைமை கட்சிகளின் தாக்கம் இது.கேரளாவை போலவே ,தஞ்சையில் தான் பொதுவுடைமை கட்சி ஆரம்பிக்கப்பட்டது-வளந்தது ...." என்று விளக்கம் சொன்னார் குளச்சல் யூசுப் அவர்கள்.குளச்சல் யூசுப் அவர்கள் சிறப்பான முறையில் ஏற்புரையாக நிறைய கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.இந்த நாவல்களை குறித்து ஞானி அய்யாவும் பொதுவாக சில கருத்துகளை பேசினார்.
திரு.அவை நாயகன் மதிப்புரை வழங்கிய கவிதை நூல் பட்டாம் பூச்சியை மட்டுமே கதா பாத்திரமாக கொண்ட "தேவதைகளின் மூதாய்". புதிய படைப்பாளியான ரவிராஜின் முதல் கவிதை நூல் இது. குழந்தை தன்மையுடன் வண்ணத்துப்பூச்சியை சிறு வயது முதல் ரசித்து வருவதாக குறிப்பிட்டார் இவர்.சின்ன சின்ன வரிகளில் அற்புத அனுபவமான அழகிய கவிதைகள் கொண்ட தொகுப்பு இது. காட்டை-இயற்கையை மிக நேசிக்கும் அவை நாயகன் இந்த நூலுக்கு மதிப்புரை வழங்கியது மிக பொருத்தமாக இருந்தது.
புது எழுத்து - வெளியிட்ட சபரிநாதனின் "களம் காலம் ஆட்டம் " கவிதை நூலை இளங்கோ கிருஷ்ணன் மிகச்சிறப்பான முறையில் விமர்சனம் செய்தார்.இலங்கையின் உன்னத கவிஞர் றியாஸ் குரானாவின் " நாவல் ஒன்றின் மூன்றாம் பதிப்பு " கவிதைத்தொகுப்பிலிருந்து சில கவிதைகளை தியாகு வாசித்தார்.

சனி, 24 மார்ச், 2012

" பயான்...." (சிறுகதை)

பிர்தௌஸ் ராஜகுமாரன்

எங்கள் முஹலவுக்குள் புதிய பள்ளிவாசல் எழும்பிக்கொண்டிருந்தது. முஹல்லா வாசிகள் இது குறித்து ரொம்ப சந்தோசப்பட்டுக்கொண்டார்கள். ஆனாலும் கட்டுமானப்பணி செலவுக்கு ஒவ்வொரு குடும்பமும் இவ்வளவு கொடுத்தாகணும் என்று கறாராக பண வசூல் செய்த போது முணுமுணுப்பு எழுந்தது . " இருக்குற பள்ளில தொழுவுரதுக்கே ஆளக்காணோம் .இதுல இன்னொரு பள்ளியாக்கும் ...."
"
முக்கு திரும்புனா…. நம்ம பள்ளியிருக்கு . பத்தாததற்கு மெயின் ரோட்ல தவுஹீத் பள்ளியிருக்கு. அப்பறம் இன்னொரு பள்ளிக்கு அப்படியென்ன அவசியம் ...?"
"
கியாமத் நாளின் அடையாளதுல ஒண்னு நிறைய பள்ளிவாசல்கள் உருவாகும் ……..ஆனா தொழுவரதுக்கு ஆளு இருக்கமாட்டாங்க. இது நபிகள் நாயகத்தோட ஹதீசாக்கும்.....நாமலே அத நெஜமாக்கிட்டு வரோம் ."
எனக்கும் இப்படியான எண்ணமிருக்கு. இருந்தாலும் , நாம் குடியிருக்கிற பக்கமே ஒரு பள்ளியிருந்தா ஐவேளையும் நேரந் தவறாம தொழலாமே .....

பள்ளிவாசல் கட்ட மஜீத் பாய் தான் இடம் வாங்கிக்கொடுத்தார். இல்ல இல்ல இது அவரோட இடமாக்கும் என்றெல்லாம் முஹலாவுக்குள் பேச்சுருக்கு. பள்ளி கட்டவும் அவருதான் முழுக்கவும் செலவு செய்யுறார். பாத்தாகுறைக்குதான் முஹல்லா வசூல். இப்ப த்டீர்னு இந்த புதுப்பள்ளி கட்டுறதுக்கு தவ்ஹீத் பள்ளி இமாமோட எதோ கருத்து வேறுபாடுதான் காரணம்னு சொல்லிக்குறாங்க. ஆக நம்ம முஹல்லப்பள்ளியும் இன்னொரு தவ்ஹீத் பள்ளிதான் ...இப்படி பல பேசுக்கள் கிளம்பி உலாவிகிட்டு இருக்கு.

ஒரு வழியாக புதுப்பள்ளி கட்டி முடிக்கப்பட்டு வெள்ளிகிழமை அஷர் தொழுகை நேரத்துல பள்ளிவாசல் திறப்பு விழா செய்யப்பட்டது. பக்கத்துக்கு முஹல்லாவிலிருந்தெல்லாம் கூட்டம் திரண்டு வந்தது புதுப்பள்ளியில் அஷர் தொழுவதுக்கு. மஜீத் பாய் தலைமை உரையாற்றினார். முன்னதாக வரவேற்றுப் பேசியவர், 'நமது ஜமாஅத்தின் தலைவர் மஜீத் பாய் அவர்கள் தலைமையரையாற்றுவார்.......' என்ற போது எனக்கு குழப்பம் ஏற்பட்டது. இவர் எப்போது இந்த புது ஜமாஅத்தின் தலைவராக்கப்பட்டார் என்பதே அந்த குழப்பம். அதைவிட வரவேற்புரையாற்றியவர் புது ஜமாஅத்தின் செகரட்டரி என்றார்கள். முஹல்லவாசிகளான எங்களுக்கெல்லாம் தெரியாமல் எப்போது எப்படி புது நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் ....என்று எனக்கு ஏற்பட்ட சந்தேகமும் ,குழப்பமும் மற்றவர்களுக்கும் எழ ஒருவருக்கொருவர் காதைக் கடித்துக்கொள்வதைப் பார்தேன். மஜீத் பாய் பேச எழுந்த போது , 'ஜமாஅத்தின் தலைவராகி முஹல்லாவை ஆட்டிப்படைக்கவே இந்த புதுப்பள்ளியைக் கட்டினாரோ இவர் ...என்றும் மெல்ல ஒரு பேச்சும் எழுந்து அடங்கியது. " ஜமாஅத் என்றால் ஐக்கியம்..ஐக்கியம் என்றால் ஒன்று பட்டு செயல் படுவது. ஆக அய்கியமில்லாமல் ஜமாஅத் இல்லை.ஜமாதில்லாமல் அய்கியமுமில்லை....." என்று நேர்த்தியான பேச்சாளரைப் போல தோரணையுடன் பேச்சை ஆரம்பித்த மஜீத் பாய் பின்பு மெல்ல சுருதி குறைத்து , " ஆனால், நம்முடைய இந்த ஜமாஅத் எந்த ஒரு கூட்டமைப்பிலையும் இல்லை ...." என்ற போது ,சின்ன சலசலப்பு எழுந்தது . 'என்ன சொல்கிறார் இவர்.’ எனக்குள்ளும் குழப்பம் . " அதாவது சுன்னத் ஜமாஅத் கூட்டமைப்பிலோ ஐக்கிய ஜமாஅத்திலோ நம்ம ஜமாஅத் சேரவில்லை.இனியும் சேராது . இது தனித்தியங்கும் ஜமாஅத் ..." என்று கூறி விட்டு கூட்டத்தை சுற்றிலும் ஒரு பார்வை பார்த்து விட்டு தொடர்ந்தார் ." இது எப்படி சாத்தியம்.....? அய்கியமில்லாமல் ஜமாஅத் இல்லைன்னு சொல்லிவிட்டு , யாருடனும் ,எந்த ஒரு ஜமாஅத்தின் கூட்டமைப்பிலும் சேராமல் ஒரு ஜமாஅத் இயங்க முடியுமா...? முடியாது . என்றாலும் நம்ம ஜமாஅத் அப்படித்தான் இயங்கப்போகிறது. இதுக்கு எந்த காரணமும் இல்லை. இந்த ஜமாஅத் அப்படியொரு முடிவை எடுத்திருக்கிறது." என்று ஆணித்தரமாக பேசி விட்டு அமர்ந்தார். எதற்காக இப்படியொரு முடிவு ..? எல்லோருக்கொள்ளும் இந்த கேள்வி எழுந்தது ..?

இவர்களாக ஒரு முடிவை எடுத்து விட்டு, இந்த ஜமாஅத் தனித்து இயங்கும்னா இதற்கு என்ன அர்த்தம். இவர்களுக்கு இந்த அதிகாரத்தை யார் கொடுத்தது ..? எப்படி ஒரு ஜமாஅத் யாருடனும் ஒட்டாமல் தனித்து இயங்க முடியும்...? இப்படியாக ஆளாளுக்கு பேசிக்கொண்டார்களே தவிர, நிர்வாகத்தை எதிர்த்து யாரும் கேள்வி கேட்கவில்லை. இதைத்தானே மஜீத் பாய் எதிர் பார்த்தார். ஆக சாதித்து விட்டார் மனுஷன்! இருக்கிற குழப்பங்கள் போதாதுன்னு....இதென்ன புது குழப்பம்....! எல்லாம் பணம் செய்யும் வேலை. பணமிருக்கிறவன் எதையும் செய்யலாம். எவனும் எதிர்த்து கேள்வி கேட்கமாட்டான்.. இங்கு இது எழுதப்படாத சட்டம். ஆக மொத்தத்தில் இது குழப்பவாதிகளின் இன்னொரு கூடாரம்னு முதல் நாளிலேயே தெரிந்து போனது.

மறு நாள் சிறு வயதுக்காரர் ஒருவர் பள்ளிக்கு புது இமாமாக நியமிக்கப்பட்டார். இமாம் வந்த முதல் நாளே தொழுகைக்கு பிறகு கூட்டு 'துஆ' (பிரார்த்தனை) செய்யப்படவில்லை. அது மட்டுமல்ல தொழுகையை முடித்த கையோடு , பின் சுன்னத் தொழுகையை கூட நிறைவேற்றாமல் இமாம் உடனே எழுந்து வெளியே போய் நின்று கொண்டு செல்போனை நோண்டிக்கொண்டிருப்பார். ஆக இது எந்த ஜமாஅத் என்பது எல்லோருக்கும் புரிந்து போனது. இமாமை எதிர்த்து யார் கேள்வி கேட்பது ..? முஸ்தபா ராவுத்தர் போன்ற சில சுன்னத் ஜமாஅத் காரர்கள் புலம்பிக்கொண்டே சென்றார்கள் .

-'பயணமாக மூன்று பேர் செல்வதாக இருந்தால் கூட , அதில் ஒருவரை உங்கள் இமாமாக (தலைவர்) ஏற்றுக்கொள்ளுங்கள்....." என்று

ஒற்றுமைக்கும், ஐய்க்கியதுக்கும் மிக முக்கியத்துவம் கொடுத்திருக்கும் - தொடர்ந்து இதை எப்போதும் வலியுறுத்திக்கொண்டே இருக்கும் மார்க்கத்தில்தான் அதை செய்யக்கூடாது ,இதை செய்யக்கூடாதுன்னு இந்த புதுப்புது இயக்கங்களால் இப்படியான குழப்பங்களும் ,அக்கப்போர்களும் நாளும் தொடர்கின்றன......இறைவனை வணங்குவதில் கூட ,அது கூடும்… ....இது கூடாது என்று ஆயிரத்தெட்டு கருத்து வேறுபாடுகள் கொண்ட கூட்டம் கடிவாளம் இல்லாத குதிரைகளாட்டம் பெருகிக்கொண்டே இருக்கு.....

மாலை வேளைகளில் அஷர் தொழுகைக்கு பிறகு குரான் கற்றுக்கொடுக்க மதரசா வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது. இருந்தும் ,ஒரு பிடிப்பும் ஒட்டுதலும் இல்லாமல்தான் மொகல்லா வாசிகள் புது ஜமாத்துடன் அன்னியப்பட்டு விலகியே இருந்தார்கள். நிர்வாகிகள் மட்டும் பள்ளிவாசல் முன்பு கூடி நின்று கொண்டு வம்பளந்து கொண்டிருப்பார்கள் எப்போதும்.வயசானவங்களுக்கு இவர்களின் நடவடிக்கை பிடிக்காமல் பழையபடி சுன்னத் ஜமாஅத் பள்ளிக்கே போக ஆரம்பித்து விட்டார்கள்.

அதிகாலை சுபுஹு தொழுகைக்கு பிறகு 'பயான்' (உபதேசம்) சொல்வதை ஒரு வழக்கமாக கொண்டிருந்தார் இமாம். பதினைந்து நிமிடங்களுக்கு பயான் நீளும் தினமும். சொல்வதையே திரும்பத் திரும்ப சொல்லி இந்த பதினைந்து நிமிடங்களையும் ஒரு வழியாக ஒப்பேத்தி விடுவார் இமாம். கதுக்குட்டித்தனமான பயானாக இருக்கும். கவனமில்லாமல் ஒருவித வெறுப்பாகத்தான் எல்லோரும் உட்கார்ந்து கொண்டிருப்போம். ஒரு சிலர் உடனே எழுந்து தப்பித்துப்போய் விடுவார்கள்- எதைப்பற்றியும் யாரைப்பற்றியும் கவலைப்படாமல். இப்படியே சில நாட்கள் சென்றன.....

***

ஒரு நாள், செல்போன்களை ஆஃப் செய்யாமல் தொழுபவர்களைப் பற்றியும், மோசமான சினிமா பாடல்களை ரிங் டோனாக வைத்து எல்லோரது கவனத்தையும் சிதறடித்து , தொழுகையை பயனில்லாமல் செய்வது பற்றியும் உரையாற்றியது மட்டுமல்ல , தொழுகையை முடித்த கையோடு செல்போனை உயிர்ப்பித்தபடி பரபரப்பாக எழுந்து போகிறவர்களைப் பற்றியும் குறிப்பிட்டு ஒரு பத்து நிமிஷம் இறையச்சத்துடன் இறைவனை வணங்க முடியாதவர்களா மாறிவிட்டோமா..நாம் ....? என்று பேசியதும் மிகச்சிறப்பாக இருந்தது. ஆகா..... இமாம் தேரிவிட்டரே..!

எப்படியோ குழப்பவாதிகளால் நல்லது நடந்தால் சரி…… என்பதாக இருந்தது எல்லோரது எண்ணங்களும். இமாமும் இனி தன்னை திருத்திக் கொள்ளுவர் என்று நான் நினைத்துக்கொண்டேன்.

முன் சுன்னத் ,பின் சுன்னத் என்கிற உபரித் தொழுகைகள் பற்றியும் இதனால் கிடைக்கும் நன்மைகளையும் பட்டியல் இட்டு இந்த உபரியான தொழுகைகளையும் உதாசீனம் செய்யாமல் கட்டாயம் எல்லோரும் தொழ வேண்டும் என்றும் வலியுறுத்தினர் அடுத்த ஒரு பயானில். இறைவனின் நற்கூலியை அதிகம் பெற வேண்டி நாமும் இனி இந்த முன்,பின் சுன்னத் தொழுகைகளை விடாமல் தொழ வேண்டுமென தீர்மானித்துக்கொண்டேன்.

அன்றைய இரவு இஷா தொழுகையை நடத்தி முடித்த கையோடு செல்போனை உயிர்ப்பித்த படிக்கு வேகமாக எழுந்து வெளியே போய்க்கொண்டிருந்தார் இமாம். இமாம் வெளியேறிச் செல்வதை நாங்கள் ஓரக் கண்ணால் பார்த்துக்கொண்டிருந்தோம்- துஆ செய்தவாறு…...

***************************

-- ஃபிர்தௌஸ் ராஜகுமாரன். பயான் -- உபதேசம்

சனி, 17 மார்ச், 2012

நீலிகண்ணீர் ..!

"ரயில் கட்டண உயர்வை அனுமதிக்க மாட்டேன் " என்கிறார் மம்தா. இது ஒண்ணும் மிகப்பெரிய கட்டண உயர்வல்ல. சென்னைக்கு இரண்டாம் வகுப்பு கட்டணம் ரூ. 25 /-தான் அதிகமாகிறது . இங்கே பேருந்து கட்டணம் இரண்டு மடங்கு மூன்று மடங்கு அதிகமாக்கி இருக்காங்க அம்மா . யாரும் வாயைத்தொறக்கவில்லை! ஆனால் மம்தாவோ "கட்டண உயர்வை அனுமதிக்க மாட்டேன் .." என்று பொங்கி எழுகிறார். பத்து வருடங்களுக்கு பிறகு உயர்ந்துள்ள இந்த சின்ன கட்டண உயர்வை நம் முதல்வர் ஜெ. " சாதாரண மக்களுக்கு கடுமையான பாதிப்பு ,சுமை .." என்று நீலிக்கண்ணீர் வடிக்கிறார். மூன்று மடங்கு பேருந்து கட்டண உயர்வு மட்டும் மக்களை பாதிக்காதா ..? இது கடுமையான சுமை இல்லையா ..?

வியாழன், 23 பிப்ரவரி, 2012

கொள்ளையர்கள் என்கவுண்டர் சரியா ..?

சென்னையில் வங்கி கொள்ளையர்கள் ஐந்து பேரை போலீஸ் சுட்டு கொன்றது சரியா ..? ஒருவரையாவது உயிருடன் பிடித்திருந்தால் விசாரணையில் பல உண்மைகள் வெளிப்பட்டிருக்குமே ...?
தீவிரவாதிகளைப் பிடிக்கும் போதும் இப்படிதான் என்கவுண்டர் செய்து கொல்லபடுகிறார்கள் ...? இது என்ன நியாயம் ...?

திங்கள், 20 பிப்ரவரி, 2012

அடித்தள முஸ்லிம்களின் வாழ்வை எழுதும் எழுத்து



திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக் கல்லூரியில் பிப்ரவரி 10 & 11 " சமகால வாழ்வில் முஸ்லிம்களின் வாழ்வியல் பதிவுகள் " என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தின் இரண்டாம் நாள் முதல் அமர்வில் "கருப்பாயி என்கிற நூர்ஜஹான் " நாவலை முன் வைத்து அதனை எழுதிய புதிய படைப்பாளி அன்வர் பாலசிங்கம் மிகுந்த ஆவேசத்துடனேயே தனது உரையை நிகழ்த்தினார். முன்னதாகப் பேசிய இந்த அமர்வின் நெறியாளர் கவிஞர் எச்.ஜி.ரசூல் அவர்கள் தன் தலைமை உரையில் படைப்புகள் , படைப்பாளிகள் குறித்தும் சமகால சூழ்நிலையில் சந்திக்கும் அடையாள நெருக்கடி பண்பாட்டுச்சூழல் குறித்தும் நீண்ட உரை நிகழ்த்தினார். ஐரோப்பிய மரபு , இஸ்லாமிய படைப்புகளின் நிலை எல்லாவற்றையும் பகடை செய்யும் வைக்கம் முகம்மது பசீரின் ஒப்பற்ற எழுத்தின் வீச்சு படைப்பின் வலி குறித்தும் மிகுந்த வலியுடன் எழுதப்படும் படைப்புகளின் தாக்கம் குறித்தும் முக்கிய உரையாக இருந்தது.
நான் எந்த ஒரு படைப்பையும் படிக்கவேயில்லை ! சுஜாதாவைப் படிக்காமல் எழுத்தாளனாகவே முடியாது என்றெல்லாம் பயமுறுத்தினார்கள் ....எங்கள் வலியை சொல்வதற்கு நான் எதையும் படிக்க வேண்டியதில்லை ..என்று நேரிடையாகவே விஷயத்துக்கு வந்தார் அன்வர் பாலசிங்கம். தாங்கள் பட்ட அவமானத்திலிருந்து தங்களை விடுவித்துக்கொண்டும், அடிமை தலையிலிருந்து விடுவித்துக்கொண்டும் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு விடிவுக்கான வழியைத் தேடி ஒரு கிராமமே மதம் மாறியது. நாவலின் மையம் இதுதான். '" நீ எதற்கு இதை எழுதினாய் ...?" என்று ஆவேசப்படுகிறார்கள் ...ஆத்திரப்படுகிறார்கள் ...என்று மிகுந்த வேதனையுடன் குறிப்பிட்ட அன்வர் " நீங்கள் எழுதியிருக்க வேண்டும் .நீங்கள் எழுதாததால் நான் எழுதினேன்...என்றார்.ஐம்பதுக்கும் மேற்பட்ட குமர்கள் முதிர்கன்னியாகவே வாடி நிற்கிறார்களே .. இரண்டாம் தாரமாக கட்டிக்கொள்ளத்தான் வருகிறார்கள் ...இதற்கு ..என்ன தீர்வு ..? இப்படியாக நாவலில் முப்பது கேள்விகள் வைத்திருக்கிறேன். அதற்கு பதில் சொன்னால் போதும். மேலும் ,இதனை காலம் தான் வரவில்லை.நாவல் எழுதி ஐந்து மாதங்கள் ஆகிவிட்டது. ஒருஆள் கூட வந்து எதுவும் விசாரிக்கவில்லை என்று மிக ஆதங்கப்பட்டார் அன்வர் . உறவுகளை எல்லாம் அறுத்து விட்டு உங்களை நம்பி வந்துள்ளோம்.இப்போது அங்கும் போக முடியாது. இங்கும் மதிப்பில்லை.திரிசங்கு நிலையில் தவிக்கிறோம். கறுப்பின அடிமை பிலால் அவர்களை முதல் முதலாக "பாங்கு" சொல்லவைத்து அழகு பார்த்த மார்க்கம் இஸ்லாம். ஆனால் எங்கள் வலியை உணர ஆள் இல்லை இப்போது ....மிகுந்த உணர்ச்சியாகவும் ,மனக் கொந்தளிப்புடனும் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் அன்வர் பாலசிங்கம். பின் பக்கமிருந்து மெல்ல சலசலப்பு எழுந்தது . சலசலப்பை செய்தவர்கள் தாஃவா அமைப்பை சார்ந்தவர்களாம். அழைப்பு பணி செய்யும் தாஃவா நண்பர்களுக்கு சகிப்பு தன்மை இல்லாதது ஆச்சிரியம் ! எதிர் கருத்து எழும் நிலை உருவாவதை நிகழ்ச்சி அமைப்பாளர்கள் விரும்பவில்லை. மற்ற இலக்கிய நிகழ்வுகளில் தமிழ் சூழலில் வழக்கமாக ஏற்படும் கருத்து மோதல்கள், கலாட்டாக்கள் இங்கும் ஏற்படும் நிலை உருவாவதை தடுக்கவே உரை தொடர்பான கேள்விகள் மற்றும் கருத்து சொல்வது தடுக்கப்பட்டது. எதிர் கருத்தை அறிய முடியாதது ஏமாற்றமாக இருந்தது.அவர்களுக்கும் வாய்ப்பு கொடுத்திருந்தால் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது புரிந்திருக்கும். ஆவேசங்கள் அலைந்து அடங்க சிறிது நேரம் பிடித்தது. அன்வர் பாலசிங்கமும் கோபம் அடைந்தார் அல்லது வருத்ததிட்குள்ளானார். அன்வரும் எழுந்து எதோ பேச முற்பட ,அவருக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டது . " பிடிக்லைன்னு சொலுங்க ,நான் வெளியேறிவிடுகிறேன் .." என்று சொல்லிவிட்டு , உடனே மேடையை விட்டு இறங்கி தன் பேக்கை தூக்கிக்கொண்டு கிளம்பிவிட முற்பட்டார் "ஒரு படைப்பாளன் இப்படி கோபப்படக்கூடாது. இருந்து கருத்தை எதிர் கொள்ளவேண்டும். நீங்கள் இப்போது இங்கிருந்து வெளியேறினால் , வேறு விதமாக பேசப்படும். எல்லோருக்குமே இது வருத்தத்தை தந்து விடும். அமைதியாக உட்காருங்கள் ...." என்று அன்வரை சமாதானப்படுத்தி என் பக்கத்தில் உட்கார வைத்தேன். .
" இந்த நாவல் வெறும் குப்பை….. " " 92 பக்க ஒப்பாரி .." என்றும் பின்புறமிருந்து குரல் எழுப்பப்பட்டதே அன்வர் கோபப்பட்டதற்கு இன்னொரு காரணம். இது ஒரு படைப்பாளனை சீண்டிப்பார்க்கும் வேலை .

இங்கே சில விஷயங்களை குறிப்பிட விரும்புகின்றேன் ."கருப்பாயி என்கிற நூர்ஜகான்" நாவலில் அன்வர் பாலசிங்கம் இஸ்லாத்தை கேள்விக்குட்படுத்தவில்லை. இஸ்லாமியர்களைத்தான் கேள்விகளுக்குள்ளாக்குகிறார் என்பதை முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.
மனிதனை மனிதனாக மதிக்கச்சொல்லும்- நடத்தச்சொல்லும் மார்க்கம் ,படைத்த இறைவனை மட்டுமே வணங்கச்சொல்லும் மார்க்கம் ,தன் தாயின் காலில் விழுவதைக்கூட தடுக்கும் மார்க்கம் தப்பான வழி காட்டுமா...? மகர் கொடுத்து பெண்ணை நிஹ்ஹா செய்யச்சொல்லி கட்டளை இடுகிறான் இறைவன்.ஆனால் இங்கே பிற மதங்களில் உள்ளதைப் போல வரதட்சணை பேராசை கொண்ட இளைஞர்களும் ,பெற்றோர்களும் பெண் வீட்டிலிருந்து பொன்னும் ,பொருளும் பெற்றுக் கொண்டு நிஹ்ஹா செய்கிறார்கள். இது யார் தவறு ? இது குறித்து ஏன் எந்த ஜமாஅத் நிர்வாகமும் , ஆலிம்களும் ,இமாம்களும் அக்கறை கொள்வதில்லை ? ஜும்மா மேடைகளில் பயானுடன் அவர்கள் கடமை முடிந்து விடுகிறதா ? நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இதைதான் இவர்களுக்கு கற்றுக்கொடுத்துள்ளர்களா..? எங்கே ....யாரிடம் தவறு ...? வட்டி ஹராம் -தடுக்கப்பட்டது . ஆனால் இதை ஒரு பெரிய பொருட்டாகவே கருதுவதில்லை அனேக முஸ்லிம்கள். இது இஸ்லாத்தின் தவறா ..? அதே போல மதுவையும் கடுமையாகவே சாடுகிறது -தடுக்கிறது இஸ்லாம் . குடிப்பவர்கள் இல்லையா இங்கே ? ஜமாஅத் நிர்வாகங்கள் என்ன நடவடிக்கைகள் எடுக்கின்றன ..? ஆக, இஸ்லாம் தடை செய்துள்ள ஹராமானவைகளை ஏற்றுக்கொள்ளுவதும் ,ஏற்றுக்கொள்ளக்கூடிய ஹலாலானவைகளை தடையாக பாவிப்பதும் இடத்துக்கு இடம் முஸ்லிம்களால் நடைமுறைப்படுதினால் அது இஸ்லாத்தின் தவறா? இஸ்லாமியர்களின் தவறா ..? ஆக, தாங்கள் பட்ட அவமானங்களை ,வலிகளை நாவலில் பதிவு செய்துள்ளார் அன்வர். அதற்கான தீர்வு என்ன ....? என்ன செய்யலாம் ....? என்பதை விடுத்தது ,இதை எப்படி எழுதலாம் என்று கேள்வி கேட்பது மடைமைத்தனம். " அடித்தள முஸ்லிம்களின் வாழ்வை எழுதும் எழுத்து " என்கிற இந்த அமர்வின் வெப்பத்தை தணிக்கும் விதமாக "இதயங்களை இணைப்பதுதான் இலக்கியத்தின் வேலை ..." என்று தனது உரையை ஆரம்பித்தார் அடுத்து ஆய்வு கட்டுரை வாசித்த பேரா. முகமது ரபீக். ஜாகிர் ராஜாவின் மீன்காரதெரு , வடக்கே முறி அலீமா , ஆகிய நாவல்களை இவர் தன் பார்வையில் மறு வாசிப்புக்கு உட்படுத்தினார். ஜாகிர் ராஜாவின் நாவல்களை கேள்விகளுக்குட்படுத்தாமல் பாராட்டும் விதமாகவே இருந்தது ரபீக் அவர்களின் ஆய்வுரை ..!! இதே தவறைத்தான் முதல் நாள் சல்மாவின் "இரண்டாம் ஜாமங்களின் கதை " நாவல் குறித்து ஆய்வுரை வாசித்த பேரா .பர்வீன் சுல்தானா அவர்களும் செய்தார் !! இஸ்லாத்தில் இல்லாததை இருப்பதாக கட்டமைக்கும் எழுத்து ஜாஹீரின் எழுத்து . இவர் நல்ல கதை சொல்லியாக இருப்பதால் சரளமாக எதையும் எழுதிச் செல்கிறார். முதலில் "வடக்கே முறி அலீமா" நாவல் வடிவமே அல்ல. நவீனத்துவ எழுத்து என்பதற்காக ,எல்லாவற்றையும் கலைத்து போட்டு எழுதியிருக்கிறார். ஒரு மனம் பிறழ்ந்த பெண் மீது ஏற்படும் அநுதாபங்கள் ஏதும் இந்த அலீமா மீது ஏற்படவில்லை.பதிலாக அவள் மீது எரிச்சலும் ,கோபமும் தான் ஏற்படுகிறது. மனம் பிறழ்ந்தள்ள வேண்டும் என்றே அவள் எல்லாவற்றிலும் எல்லை மீறுகிறாள்.அதே போலவே எல்லா சமூகத்திலும் நிலவும் ஏழை பணக்காரன் இவர்களுக்குள் இருக்கும் ஏற்ற தாழ்வுகளை இஸ்லாத்தில் நிலவும் ஜாதீயமாக கட்டமைத்துள்ளார்- " மீன் காரத்தெரு " நாவலில். அப்போதே இது குறித்து நான் அவரிடம் கேட்டபோது , "எங்கள் ஊரில் (கிரனூர்) இருக்கு " என்றார். அவர் ஊரில் இருப்பதை இஸ்லாத்தில் இருப்பதாக கட்டமைப்பது ஏற்புடையதா...? லெப்பை ,ராவுத்தர் ,மலையாள முஸ்லிம் இப்படி யாராக இருந்தாலும் எந்த வேறு பாடும் இல்லாமல் பெண் எடுப்பதும் ,கொடுப்பதும் காலம் காலமாக நடந்து வருகிறது.பணக்காரன் ,ஏழை என்கிற ஏற்ற தாழ்வுகள் உண்டே ஒழிய ஜாதீயம் இஸ்லாத்தில் இல்லவே இல்லை. அதே போலவே முஸ்லிம் பெண்களை கொச்சை படுத்திய நாவல் சல்மாவின் "இரண்டாம் ஜாமங்களின் கதை " தி.ஜானகி ராமன்,தஞ்சை பிரகாஷ் ,கரிசான் குஞ்சு, ஜி.நாகராஜன் என்று நிறைய பேர் பாலியலை எழுதியிரிக்கிரார்கள்.தோப்பிலார் எழுதவில்லையா ..? ஆனால் அவர்கள் ஒட்டு மொத்த ஒரு சமுகத்தின் அவலமாக - நிகழ்வாக இதை காட்டவில்லை. இஸ்லாமிய பெண்களுக்கு வேறு எந்த பிரச்சனைகளும் இல்லை -பின்னடைவுகளும் இல்லை என்பது போலும் அவர்கள் அடக்கி வைக்கப்பட்ட பாலியல் வேட்கை மிகுந்தவர்களகவுமே இருக்கிறார்கள் என்பதகவேதான் நாவல் காட்டுகிறது. ஒரு பெண் கற்றட்ட பாலியல் வேட்கைக்காக எல்லாவற்றையும் துறந்து அல்லது எதிர்த்து துணிந்து ஓடி வந்து விட்டால் பெண்ணடிமைத் தனத்திலிருந்து விடுபட்டவளாகிவிடுவாளா...? இப்படியான படைப்புகள் இங்கு கொண்டாடப்படுகிறது. நல்ல இஸ்லாமியபடைப்புகள் இங்கு கண்டு கொள்ளப்படுவதில்லை. தமிழ் இலக்கிய வரலாற்றில் எந்த இஸ்லாமியப் படைப்பாளியின் பெயரும் இல்லை. இப்போதும் யாரும் அது குறித்து எழுதுவதில்லை. தொடர்ந்து தமிழ் இலக்கிய வரலாற்றில் இந்த இருட்டடிப்பு செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து முதல் நாள் தனது துவக்க உரையில் பேரா.அப்துல் சமது அவர்களும் விரிவாக புள்ளி விவரங்களுடன் பதிவு செய்துள்ளார்.
ஜாகிர் ராஜாவை பற்றி இங்கே ஒன்றை முக்கியமாக பதிவு செய்தாகவேண்டும் . இஸ்லாமிய இலக்கிய கூட்டங்களுக்கு இவர் வருவதே இல்லை.இவரிடம் கேட்டுத்தான் பெயரை போடுகிறார்கள். ஆனால் இவர் வருவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது. கருத்தை எதிர் கொள்ள பயப்படுகிறாரா ..ஜாகிர் ..? இதற்கு அவர்தான் பதில் சொல்லவேண்டும். .

திங்கள், 23 ஜனவரி, 2012

திருப்பூர் புத்தக கண்காட்சியில் வருகிற 31.01.2012 அன்று “உலகை குலுக்கிய புத்தகங்கள்” என்கிற தலைப்பில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களை உரை நிகழ்த்துகிறார். வாசிப்பின் அனுபவத்தை பெற, அவசியத்தை உணர அனைவரும் வாருங்கள் ஜனவரி 25 முதல் பிப்ரவரி 5 வரை, திருப்பூர் புத்தக கண்காட்சி, இடம் டைமண்ட் தியேட்டர் எதிரில்.